Tuesday, February 14, 2006

மரத்திடம் சில கேள்விகள்!




இறந்த பின்னும் ...
மண்ணைக் கவ்வி காலூன்றி,
பலநூறு கைகளை வெளியினுள் பரப்பி,
என்ன தேடுகிறாய்?
எதை அடைய இவ்வளவு பிரயத்தனம்…
வானைத் தொடவா?
இல்லை, வான்வழியே பயணித்து
கதிரவனைத் தொடவா?
தலைவிரிகோலமாய் நின்று
குளிரை பயமுறுத்துகிறாயா?
அதனை விரட்டுகிறாயா?
அதனோடு போரிடுகிறாயா?
பகீரதன் தவம் நின்றது போல
ஒற்றைக் காலை ஊன்றி,
கைகளைக் கூப்பி,
எதையும் பொருட்படுத்தாது நிற்கிறாய்...
எதற்காக இந்தத் தவக்கோலம்...
உயிர்வேண்டித் தவமிருக்கிறாயா?
அழுது புரண்டாலும் ,
தவமாய்த் தவமிருந்தாலும்...
வேண்டுவது கிடைக்க,
காலம் வரும்வரை பொறுத்தே தீரவேண்டும்
என்ற பாடம் சொல்லவா?
நான்கு திங்கள் செத்துப் பிழைக்கிறாய் ...
உன் வேண்டுதல் ...
வெம்மையின் வருகையால் நிறைவுறுகிறது...
உயிர் பெற்றதைக் கொண்டாட ,
ஊரெல்லாம் அறிவிக்க,
பூக்களை உடுத்திக் கொள்கிறாய்...
வண்ணங்களில் ஜொலிக்கிறாய்
வாசனை பரப்புகிறாய்...
ஒவ்வொரு வருடமும்(வசந்தமும்) புதிதாய்ப் பிறக்கிறாய்!
அதே பழைய உடலுடன்... !!!

Friday, February 03, 2006

இலக்கணக் குறிப்புகள்
வாழ்க்கை - வினைத்தொகை
காதல் - முரண்தொடை
மரணம் - வினைமுற்று

வாழ்க்கை
தேடுதலில் தொலைந்து போவது...
பின்...
தொலைந்ததைத் தேடுவது...